Counseling for Siddha, Ayurveda, Homeopathy begins on Oct. 26: Salem student tops rank list

 Counseling for Siddha, Ayurveda, Homeopathy begins on Oct. 26: Salem student tops rank list  

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், சேலம் மாணவி முதலிடம் பிடித்துள்ளார். வரும் 26-ம் தேதி சென்னையில் கலந்தாய்வு தொடங்குகிறது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,689 பேரும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 1,040 பேரும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு 942 பேரும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு 596 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனித்தனியாக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், தேர்வுக்குழுத் தலைவர் மருத்துவர் பா.மலர்விழி ஆகியோர் உடன் இருந்தனர்.


இதில், 2,530 பேர் இடம்பெற்றுஉள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.வி.வைசாலி (நீட் மதிப்பெண் - 720-க்கு 602) முதலிடம் பிடித்துள்ளார். 968 பேர் இடம்பெற்றுள்ள நிர்வாக ஒதுக்கீடு மற்றும் 942 பேர் இடம்பெற்றுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டில் சென்னையைச் சேர்ந்த மாணவர் எம்.ஹரிஹரன் (நீட் மதிப்பெண் 506) முதலிடம் பெற்றுள்ளார். 556 பேர் இடம்பெற்றுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பட்டியலில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஜி.திருமலை (நீட் மதிப்பெண் 363) பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 92 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.


சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 26-ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு பிரிவினருக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


அதைத்தொடர்ந்து, 27 முதல் 29-ம் தேதி வரை அரசு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும், 31-ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும், நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத் துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்

NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.




0 Comments